ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. இருப்பினும் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. இப்போதே தொடங்கி உள்ளது. பி.சி.சி.ஐ. கவுதம் கம்பீர், விவிஎஸ் லக்ஷ்மன், ஆசிஸ் நெஹ்ரா போன்ற இந்திய முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியானது. இந்தநிலையில் கவுதம் கம்பீர், தனக்குதான் அந்த பதவி வழங்கப்படும் என்ற உத்தரவாதம் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. கம்பீர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். அந்த அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
