பாரத பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அங்கு நடைபெற்ற மத கலவரம் சம்மந்தமாக லண்டன் பிபிசி நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த ஆவண படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில்
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே பிபிசி தயாரித்த மோடிக்கு எதிரான ஆவண படத்தை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஒளிபரப்பு செய்தனர். இதனை அறிந்த பாஜக கட்சியினர் பாஜக மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் பிபிசி யின் ஆவணப் படத்தை ஒளிபரப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் ஐயப்பன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.