Skip to content

தெலங்கானா…. வங்கி கணக்குகளில் பணமழை…. அரசியல் கட்சிகள் வாரி வழங்கியதா?

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை பணம்  டெபாசிட் ஆனது. வங்கிக் கணக்கில் பணம் வந்தது குறித்து அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. இதனை கண்ட வங்கி வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு சிலர் உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட்டான பணத்தை உடனே சென்று ஏடிஎம் கார்டுகள் மூலம் எடுத்தனர். ஒரு சிலர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்தனர். இந்த செய்தி மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

எஸ்.எம்.எஸ் வராத வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரி பார்த்தனர். இதேபோல் ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.இந்த சம்பவம் வங்கி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் ஆனது என்பது குறித்த விவரங்களை போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

சாமானியர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் ஒரு நிறுவனத்தின் போனஸ் தொடர்பானது என்பது தெரியவந்தது. வங்கியில் போடப்பட்ட பணம் அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு  வழங்கப்பட வேண்டிய போனஸ் பணமாகும். வனத்துறையினர் சார்பில் ஐதராபாத்தில் இருந்து நேரடியாக இலை சேகரிப்பாளர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணம் அனுப்பியது யார் என்று தெரியவில்லை.

ஏட்டூர் மண்டல மையத்தைச் சேர்ந்த சுமார் 50 பேருக்கு கடந்த சனிக்கிழமை வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.1 லட்சம். 2 லட்சம் பொதுமக்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. பணப் பரிமாற்றம் குறித்து ஏத்தூர்நகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தெலங்கானா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதால் ஒரு கட்சி  மக்களுக்கு இப்போதே பணம் வழங்க ஆரம்பித்து விட்டது என மக்களிடையே பேச்சு எழுந்தது.  இதனால் அரசியல் கட்சி கொடுத்த பணம் தான் என மக்கள்  அந்த பணத்தை ஆடம்பரமாக செலவிடவும் தொடங்கினர்.  விசாரணையில் இது அரசியல் கட்சி பணம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!