சென்னை மேற்கு மாம்பலம் தனபால் தெருவைச்சேர்ந்தவர் பழனிச்சாமி ( 62). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- குமரன் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் பெயரில், வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத்தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. எனக்கு அது தொடர்பான எஸ்.எம்.எஸ். தகவலும் வந்தது. அது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசியபோது, நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி, முதலில் கமிஷன் தொகையை அனுப்ப சொல்லி, வங்கி கணக்கு ஒன்றை அனுப்பி வைத்தனர். அந்த வங்கி கணக்கில் ரூ.2½ லட்சத்தை கமிஷனாக அனுப்பி வைத்தேன். ஆனால் கடன் எதுவும் வாங்கி தராமல், நான் அனுப்பி வைத்த பணத்தை மோசடி செய்து விட்டனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தென் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்கள். இந்த மோசடியில் ஈடுபட்டதாக டில்லியைச்சேர்ந்த விஸ்வநாதன் (29), துரைமுருகன் (24), ராஜேஷ் (33) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் டிடெல்லி சென்று கைது செய்தனர். கைதானவர்களிடம் ரூ.1½ லட்சம் மற்றும் மோசடி செய்ததற்கான ஆவணங்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் நேற்று சென்னை அழைத்துவரப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். போலியான நிதி நிறுவனத்தை அடையாளப்படுத்தி, இதுபோல ஆன்லைன் மூலம் ஏராளமான பேர்களிடம் மோசடி செய்துள்ளனர்.