Skip to content
Home » வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

  • by Senthil

 இந்தியாவின்  நட்பு நாடு, இந்தியாவின்  அண்டை நாடு வங்கதேசம். இந்த நாட்டை உருவாக்கியதில் கூட இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு.  அந்த நாட்டின் வாழ்விலும், தாழ்விலும் இந்தியா இணைந்தே இருந்திருக்கிறது.

ஆனால் அந்த நாட்டில்  சமீப காலமாக நடந்த  வன்முறைகள், படுகொலைகள் உலகை அதிர்ச்சி அடைய செய்தது. இதனால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து விட்டு  இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார்.  வங்கதேச ராணுவம், இடைக்கால அரசை நிறுவி உள்ளது. இவை உள்நாட்டுப் பிரச்சினை; இந்தியா உட்பட எந்த நாடும் இதில் தலையிட முடியாது.

1996 – 2001 வரை, பிறகு 2009-ல் இருந்து நேற்று வரை தொடர்ந்து 15 ஆண்டுகள், பிரதமர் பதவி வகித்த ஷேக் ஹசீனா அந்த நாட்டின் வளர்ச்சிக்கு  முக்கிய பங்காற்றியவர்.

இந்தக் குறுகிய காலத்தில் என்ன நடந்தது? 1971-ல் நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களின் வாரிசுகளுக்கு, அரசுப் பணிகளில் 30% ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 1972-ல் இருந்தே இது நடைமுறையில் இருந்தாலும், 2018-ல் விலக்கிக் கொள்ளப்பட்டு, மீண்டும் கொண்டு வரப்பட்டது.

இதனை பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; இது, ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்டது என்று கருதினர். தகுதி, தரத்தின் அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்பட வேண்டும் என்று கோரினர்.

இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவாமி லீக் கட்சியினரின் அலுவலகங்கள், வீடுகள் தாக்கப்பட்டன; தீக்கிரையாக்கப்பட்டன. நாட்டின் உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது. 30% ஆக இருந்த இருந்த சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு 5% ஆக குறைக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இளைஞர்களின் போராட்டத்தை தணித்து விடவில்லை.

மானவர்கள் மீண்டும் போராட்டம், கலவரத்தில் ஈடுபட்டனர். மக்களின் கோரிக்கையை, இளைஞர்களின் போராட்டத்தை, அலட்சியப்படுத்தினார் பிரதமர் ஹசீனா. ராணுவம் காவல் துறை கட்சித் தொண்டர்களின் உதவியுடன் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டார். கடந்த ஞாயிறு நடந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இத்தனை கலவரங்களுக்கு மத்தியில், ‘வங்கத் தந்தை’ என்று போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் (ஷேக் ஹசீனாவின் தந்தை) சிலையை கலவரக்காரர்கள்  நொறுக்கி தள்ளினர்.

53 ஆண்டுகளுக்கு முன்பு, சரியாகச் சொல்வதானால் 1971 மார்ச் 7 அன்று, டாக்கா ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், லட்சக்கணக்கில் திரண்டு இருந்த மக்கள் முன்பு, ஷேக் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றினார். “இது நமது முன்னேற்றத்துக்கான போராட்டம்; நம் நாட்டு விடுதலைக்கான போராட்டம். ஒவ்வொரு வீடும் ஒரு கோட்டையாக மாற வேண்டும்” என்று முழங்கினார். இந்த உரையை, 2017 அக் 30 அன்று, ஐ. நா. வின் யுனெஸ்கோ அமைப்பு, தனது பாரம்பரிய நினைவு பதிவேட்டில் ஏற்றுக் கொண்டு மரியாதை செய்தது.

“இன்று வங்கதேசத்தில் எழும் குரல், விடுதலைக்கான குரல்; உயிர் வாழ்வதற்கான குரல்; நமது உரிமைகளுக்கான குரல்” என்று உரக்கப் பேசிய அந்தக் குரலுக்கு உரியவர்.. பாகிஸ்தான் ராணுவத்தின் மனிதாபிமானமற்ற தாக்குதலை எதிர்கொண்டு வெற்றி கண்டவர்… அந்த நாட்டு மக்களாலே அவமானப் படுத்தப்படுகிறார்!

மற்றொரு அதிர்ச்சிகரமான உண்மை – தற்போதைய போராட்டம் – டாக்கா பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கியது. இதே… டாக்கா பல்கலைக் கழக வளாகம் 1971 மார்ச் 25, 26 ஆகிய இரு நாட்களும், மனித குலம் கண்டிராத படு கோரமான, இரக்கமற்ற இனப் படுகொலையைச் சந்தித்தது. பல்கலைக்கழகத்தின் புகழ் பெற்ற பேராசிரியர்கள் ஃபஜிலுர் ரஹ்மான், அன்வர் பாஷா, ரஷிதுல் ஹசன், அப்துல் முக்தாதிர், கான் காதிம், ஷரஃபத் அலி, உளவியல் பேராசிரியர் டாக்டர் கோவிந்த சந்திர தேவ் உள்ளிட்டோர், 1971 மார்ச் 26 அதிகாலை, பல்கலைக்கழக வளாகத்திலேயே, பாகிஸ்தான் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர் .இந்த கோர நிகழ்வை, ‘டாக்கா பல்கலைக்கழக படுகொலை’ என்றே சரித்திரம் பதிவு செய்கிறது.

சீனாவில் நடந்த தினானமென் சதுக்கப் படுகொலை (1989), இலங்கையில் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலை (2009) போன்றே, டாக்கா பல்கலைக்கழக படுகொலையும் மனித குல வரலாற்றில் நிரந்தரக் கரும்புள்ளியாய் இருந்து வருகிறது. இது குறித்து இன்றைய வங்கதேச இளைஞர்கள் ஒருகணம் சிந்தித்துப் பார்த்து இருந்தால், முஜிபுர் சிலையை சேதப்படுத்தியிருக்க மாட்டார்கள்.

போராட்டக்காரர்களின்  செயலினால் ஏற்படும்  மோசமான, விளைவுகள் குறித்துத்  விரைவில் தெரிய வரும்.  இப்போது வங்கதேசத்தின் முன்  எதிர்காலத்தை தொலைத்த நிச்சயமற்ற  தன்மை நிலவுகிறது.

இது, அந்த நாட்டுக்கு நல்ல செய்தி அல்ல. விரைவில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பது தான்  நமது விருப்பம். ஏனென்றால் வங்கதேசம் உருவானதில்  வங்கதேசத்தை சேர்ந்த தலைவர்களை விட  இந்திராகாந்தியின் பங்கு தான் முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்திரா காந்தியின் முக்திவாகினி நடவடிக்கை இருந்திருக்காவிட்டால் வங்கதேசம் என்ற ஒரு நாடு இன்று இருந்திருக்காது.

இந்த போராட்டக்காரர்களுக்கு அது தெரிந்திருக்க நியாயம் இல்லை. அதனால் தான் அங்கு போகிற போக்கில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும்  போராட்டக்காரர்கள் எடுத்துள்ளனர்.

வங்கதேசத்தில் அமைதி திரும்பினாலும், திரும்பாவிட்டாலும் அது எப்போதும் இந்தியாவுக்கு ஒரு பெரும் தலைவலியாகத்தான் இருக்கும். காரணம்  வங்கதேசத்தை நாம் உதறி விட்டு விட்டு வந்து விட்டோனால்,  சீனா அங்கு போய் கடை விரித்து விடும். உதவுகிறேன் என்ற பெயரில் இந்தியாவுக்கு தலைவலி கொடுக்க தொடங்கி விடும். இதைத் தடுக்க நாம் வங்க தேசத்திற்கு உதவித்தான் ஆக வேண்டும்.

இதையெல்லாம் தெரிந்து கொண்டே வங்கதேசத்தினர் நம்மிடம் உதவிகளை பெற்றுக்கொண்டே, நமக்கு எதிராக போராடுவார்கள். இதை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும் இது தான் இந்தியாவின் விதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!