பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் மேற்கொண்டார். அவரது தீவிர முயற்சியால் கடந்த மாதம் 23-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது.
இதில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள் உள்பட 16 கட்சிகள் பங்கேற்றன. தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று இந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது கூட்ட பெங்களூருவில் வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு அனுப்பி உள்ளது. புதிதாக 8 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, கொங்குநாடு மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- பாட்னாவில் ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும். வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் வருகை தர வேண்டும். நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.
சோனியா காந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். பாட்னா கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. பெங்களூருவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி எதிர்க்கட்சிகளுக்கு விருந்து அளிக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தும் வகையில் அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இந்த கூட்டத்தில் மாநில அளவில் கூட்டணிகளை உருவாக்குவது, நாடு முழுவதும் 450 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்துவது, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுப்பது ஆகியவை குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்து உள்ளார். முதல் ஆலோசனை கூட்டத்தில் டில்லியின் அவசர சட்டம் தொடர்பாக காங்கிரசுக்கும், ஆம்ஆத்மி கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவசர கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் ஆதரவை தெரிவிக்காவிட்டால் அடுத்த கூட்டத்தை புறக்கணிக்க போவதாக கெஜ்ரிவால் மிரட்டினார். அப்போது அவரை மம்தா பானர்ஜி, சரத்பவார் ஆகியோர் சமாதானப்படுத்தினர். பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்க ஆம்ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் அழைப்பு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.