பெங்களூருவில் அவ்வப்போது ஹனிடிராப் முறையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொழில் அதிபர்கள், வசதி படைத்தவர்களை குறிவைத்து சில கும்பல் இதுபோன்ற பணப்பறிப்பில் ஈடுபடுகின்றன.
ஹனிடிராப் முறையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.82 லட்சம் வரை பணம் பறித்த சம்பவம் ஜெயநகரில் நடந்துள்ளது. பெங்களூரு ஜெயநகர் பகுதியை சேர்ந்தவர் சிதீந்திரா (60). இவர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி . இவருக்கு ரீனா அன்னம்மா (40) என்ற பெண் அறிமுகம் ஆனார். இந்த நிலையில், அன்னம்மா, சிதீந்திராவிடம் கடனாக ரூ.5 ஆயிரம் வாங்கி இருந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் நெருங்கி பழக தொடங்கினர். அவர்கள் இருவரும் விடுதி ஒன்றில் அறை எடுத்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.
இதனை அன்னம்மா தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அன்னம்மா, சிதீந்திராவிடம் அந்த வீடியோவை காட்டி தனக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். மேலும் அன்னம்மா, சினேகா (30) என்பவருடன் சேர்ந்து சிதீந்திராவை மிரட்டி ரூ.82 லட்சம் வரை பறித்துள்ளார். அந்த வீடியோவை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்கள் மேலும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். 2 பேரும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததால், சிதீந்திரா, இதுபற்றி ஜெயநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்னம்மா மற்றும் சினேகாவை கைது செய்தனர். மேலும் இதற்கு உதவியாக இருந்த சினேகாவின் கணவர் லோகேசையும் போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்