பெங்களூரு நகரில் நேற்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மன்யதா ஐ.டி. பார்க் சுற்றியுள்ள பகுதியில் கனமழை பெய்தது.
மன்யதா ஐ.டி. பார்க் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அங்கு 100க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கே புதிய கட்டடம் கட்டுவதற்கான பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கனமழை பெய்த காரணத்தினால் அந்த குழியில் அதிக மழை நீர் சேர்ந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த குழியை சுற்றியுள்ள சுமார் 3 கட்டிடங்கள் இடிந்து அந்த குழிக்குள் விழுந்தது.
நல்வாய்ப்பாக அந்த பகுதியில் யாருக்கும் காயமும், உயிர்சேதமும் ஏற்படவில்லை ஆனால் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக மழை நீர் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.