பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ராமேஸ்வரம் கஃபே என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பெங்களூரு நகர மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள இந்த உணவகத்தில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் இன்று மதியம் ஏராளமானோர் சாப்பிடுவதற்காக உணவகத்தில் காத்திருந்தனர்.

மதியம் 12:56 மணியளவில் திடீரென உணவகத்தில் மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது, உணவக ஊழியர்கள் மூன்று பேர் மற்றும் வாடிக்கையாளர் ஒருவர் என 4 பேர் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், சிலிண்டர் விபத்து எதுவும் நேரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
