நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் உள்ளது. இந்நிலையில், இந்த இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதில், தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டு உள்ளார். கர்நாடகாவின் பெங்களூரு நகரில் வைத்து, அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அந்நபரை என்.ஐ.ஏ. கைது செய்து உள்ளது. பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் அவர் பணியாற்றி வந்து உள்ளார். அவரது பெயர் ஆரீப் என தெரிய வந்து உள்ளது. அவர், பயங்கரவாத இயக்கத்துடன் 2 ஆண்டுகளாக ஆன்லைன் வழியே தொடர்பில் இருந்து வந்து உள்ளார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைவதற்காக ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு செல்லவும் அவர் விரும்பி உள்ளார் என விசாரித்ததில் தெரிய வந்து உள்ளது. வேறு என்ன திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன? என்பன உள்ளிட்ட விவரங்கள் பற்றி, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.