பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். குறிப்பாக மதுரையில் தை மாதம் முதல் மூன்று நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றதாகும்.
தை முதல்நாளான நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. 2ம் நாளான இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டை தமிழக வணிகம் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை கலெக்டர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து, காளைகளை பிடிக்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதன்பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது.
ஜல்லிக்கட்டுக்கு 4,820 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. எனினும், 1,100 காளைகளுக்கு மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 1,900 மாடுபிடிவீரர்கள் ஆன்லைன் வழியே பதிவு செய்திருந்தனர். அவர்களில் 910 பேர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வாடிவாசலில் இருந்து 1,100 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகின்றன. அவற்றை பிடிக்க வீரர்களும் உற்சாகத்துடன் களம் இறங்கினர். முதல் சுற்றில் மஞ்சள் உடை அணிந்த வீரர்கள் இறங்கினர். முதல் சுற்றில் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டி 10 சுற்றுகளாக நடத்தப்படும். ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 70 வரையிலான வீரர்கள் களம் இறக்கப்படுகிறார்கள்.. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
முதல் இடம் பிடிக்கும் காளைக்கு டிராக்டர் பரிசும், முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு கார் பரிசும் வழங்கப்பட உள்ளன. இதேபோன்று, மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட உள்ளன. டி.வி., பிரிட்ஜ், பீரோ, சைக்கிள், பைக், 2 சக்கர வாகனங்கள், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. போட்டியை காண ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.