கரூர் அருகே பேக்கரியில் இளைஞர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தால் 1 இளைஞரை 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அடுத்த காணியாளம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் பாப்பனம்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வேப்பங்குடியை சேர்ந்த 2 இளைஞர்கள் பேக்கரிக்கு முன்புறம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து, என்ஜினை அதிவேகத்தில் இயக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது சத்தம் அதிகமாக கேட்டதால், எதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று பாப்பனம்பட்டியை சேர்ந்த இளைஞர்கள் கேட்டுள்ளனர். நாங்கள் அப்படித்தான் சத்தமிடுவோம் என வேப்பங்குடியை சேர்ந்த இளைஞர்கள் கூறியதாகவும், அதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த வேப்பங்குடியை சேர்ந்த 2 இளைஞர்களும், போன் செய்து தங்கள் ஊரைச் சேர்ந்த இளைஞர்களை பேக்கரிக்கு வரவழைத்துள்ளனர். அப்போது வேப்பங்குடியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கு வந்து 5 இளைஞர்களையும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ஒரு இளைஞரை 5-க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் காயமாடைந்த பாப்பனம்பட்டியை சேர்ந்த 2 இளைஞர்கள் காணியாளம்பட்டி அரசு மருத்துவமனையிலும், 3 இளைஞர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய வேப்பங்குடியை சேர்ந்த நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக்கூறி சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் பாப்பனம்பட்டி கிராமத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.