கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொசூரில் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் பேக்கரி கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை கோட்டை கரையான் பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அங்கு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்க வந்துள்ளார். பாதாம் கீர் வாங்கி குடித்துவிட்டு பில் செலுத்தும்போது பாதாம் கீர் விலை 30 ரூபாய் என பேக்கரி உரிமையாளர் கூறியுள்ளார்.
பாதாம்கீரின் விலை 25 ரூபாய் தானே என கேட்டபோது, ஃப்ரிட்ஜில் வைத்து கூலிங் ஆக தருவதற்கு கூடுதலாக 5 ரூபாய் எனக் கூறியுள்ளார். ஆனால் வேல்முருகன் பாதாம் கீர் கூலிங் குறைவாகவே இருந்தது இதற்கு ஏன் ஐந்து ரூபாய் கூடுதலாக கேட்கிறீர்கள் என வாக்குவாதம் செய்துள்ளார். இதனை அடுத்து பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறியவர் தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களிடம் இது குறித்து கூறியுள்ளார்.
இதனை அடுத்து வேல்முருகன் அவரது நண்பர்களான கோட்டை கரையான் பட்டியை சேர்ந்த திருமுருகன், சரவணன், வேல்முருகன், பாண்டியன், மணிவேல், ராமமூர்த்தி கருப்பசாமி வினோத் உள்ளிட்ட 11 பேரை அழைத்து வந்து பேக்கரி கடையில் புகுந்து கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சரவணன் மற்றும் சிவக்குமார் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். கடையையும் சூறையாடினார்.
இந்த தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கடையை சூறையாடிய 11 பேரை தேடி வருகிறார்கள்.