மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தி டார்ச்சர் செய்ததில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததை தொர்ந்து அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டதில் இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக ஆபரேசன் செய்யப்பட்டது.
ஆபரேசன் முடிந்த சில நாட்களிலேயே அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 15மாதங்களாக அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை செசன்ஸ் கோர்ட், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி சார்பில் வக்கீல் ராம் சங்கர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது.கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு அளிக்கப்பட்டது. நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜர்ஜ் அமர்வு , செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீன் கிடைத்ததால், 15 மாதத்திற்கு பின்னர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருகிறார். இதனால் திமுகவினர் மகிழ்ச்சி, உற்சாகம் அடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து , இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.