அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார். ஏறத்தாழ 330 நாட்களுக்கும் மேலாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது பதில் அளிக்க ஏப்ரல் 29ம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு காலஅவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் துவங்கி தொடர்ந்து அமலாக்கத்துறை பல்வேறு கட்டங்களில் கால அவகாசம் கேட்டு மே 6ம்தேதி வரை இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில், மே 8ம் தேதிவரை அமலாக்கத்துறை பதில் அளிக்ககாததால் உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை நடைபெறும் என ஜூலை 10ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 10ம் தேதி செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, விசாரணையை வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்தார். இன்றும் நாளையும் மற்றொரு வழக்கில் தான் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க கோரினார். இதற்கு செந்தில் பாலாஜி வழக்கறிஞர் அமலாக்கத்துறை வேண்டுமென்றே வழக்கை இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டினார்.
செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளார் . அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு(இன்று) விசாரணை நடைபெறும் என அறிவித்தது. அதன்படி செந்தில் பாலாஜி வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. அப்போது அவருக்கு ஜாமீன் கிடைக்கலாம் என தெரிகிறது. டில்லி முதல்வருக்கும் இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ள நிலையில் செந்தில் பாலாஜி வழக்கிலும் ஜாமீன் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.