பாஜ தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூரு 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார். கடந்தாண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அத்தேர்தலின் பரப்புரை நேரத்தில் கர்நாடகாவில் பாஜ ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடமிருந்து 40 சதவீதம் கமிஷன் பெறப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து பாஜ மீது அவதூறு பரப்பியதாக ராகுல் காந்தி மீது பாஜ மேலவை உறுப்பினர் கேசவ் பிரசாத் புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 1ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.அன்றைய தினம் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஜூன் 7ம் தேதி அவரை ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தார் ராகுல் காந்தி. நீதிமன்ற உத்தரவின்படி, இன்று வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் ராகுல் காந்திக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.