Skip to content

போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதை கொண்டாட கடந்த 18ம் தேதி இரவு நண்பர்களுடன் தனது தந்தையின் சொகுசு காரில் கல்யாணி நகரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு வேதாந்த் உள்பட அனைவரும் மதுகுடித்துள்ளனர்.

பார்ட்டி முடிந்தபின்னர் 19ம் தேதி அதிகாலை 3 மணியளவில் வேதாந்த் சொகுசு காரில் வீடு திரும்பியுள்ளார். சொகுசு காரில் 200 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். கல்யாணி நகர் ஜங்சன் பகுதியில் அதிவேகமாக சென்ற கார் முன்னே சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த ஐ.டி. ஊழியர்களான அனுஷ் மற்றும் அவரது தோழி அஸ்வினி கோஷ்டா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு மற்றொரு காரில் விழுந்தனர். இந்த சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேதாந்த் அகர்வால் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினான்.  விபத்தை ஏற்படுத்திய கார் தடுப்பு சுவரில் மோதி நின்ற நிலையில் அதை சுற்றிவளைத்த அக்கம்பக்கத்தினர் காரை ஓட்டிய சிறுவன் வேதாந்த் அகர்வாலை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், விசாரணைக்காக யரவாடா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

போலீஸ் நிலையத்தில் வேதாந்த் அகர்வாலுக்கு பீட்சா, பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின. கைது செய்யப்பட்ட சிறுவன் வேதாந்த், மறுநாள் காலை சிறார் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சிறுவன் வேதாந்த் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்டிஓ) சென்று போக்குவரத்து விதிகளை படிக்க வேண்டும். சாலை விபத்து குறித்து 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும். யரவாடா பகுதியில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து 15 நாட்கள் வேலை செய்ய வேண்டும்.

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட மனநல மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்து வேதாந்திற்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. விபத்து ஏற்பட்ட 15 மணிநேரத்தில் சிறுவன் வேதாந்திற்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 15 மணிநேரத்தில் குற்றவாளியான சிறுவனுக்கு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கிய சம்பவம் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குவதாக சமூகவலைத்தளத்தில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் தலைமறைவாக இருந்த சிறுவன் வேதாந்தின் தந்தை விஷால் அகர்வாலை போலீசார் கைது செய்தனர். மேலும், சிறுவனுக்கு மதுபானம் வழங்கியதற்காக  கேளிக்கை விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் 2 பேர் உயிரை பறித்த பணக்கார சிறுவனை சட்டம் எதுவும் செய்யவில்லையே. சட்டம்  பணக்காரர்களுக்கு கிடையாதா என்று சமூக வலைதளங்களில்  நெட்டிசன்கள்  கொந்தளிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!