திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையை அடுத்த தபோவனத்திற்கு எதிர்புறம் உள்ள புதர் மண்டிய பகுதியில்குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் துணியால் மூடப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்த பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு, ஜீயுபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், சமூக நலத்துறையினருடன் சேர்ந்த திருச்சி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு இங்க்குபேட்டரில் வைத்து குழந்தை பராமரிக்கப்பட்டது.குழந்தையை வீசிசென்றது யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை அங்குள்ள புதரில் வீசிச்சென்றது தெரியவந்தது. திருமணத்திற்கு முந்தைய தவறான உறவில் குழந்தை பிறந்ததால் அதனை விட்டுச்சென்றதும் உறுதியானது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த தகவல் அறிந்த கல்லூரி விசாரணைக்கு பயந்து விஷத்தை குடித்து மயங்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழந்தை அனுமதிக்கப்பட்ட அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜீயபுரம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.