பாபநாசம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் தஞ்சை வேளாண் இயக்குநர் நல்லமுத்துராஜா ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய, மாநில அரசு மானியத்திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகித்திட பெறப்பட்டுள்ள ஜிப்சம், சிங்க்சல்பேட், உளுந்து, சோயா விதைகள், உயிர் உரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் அய்யம் பேட்டை அருகே ஈச்சங்குடி கிராமத்தில் வரிசை விதைப்புக்கருவி கொண்டு சாகுபடிச் செய்யப்பட்டுள்ள சோயா வயல்களை ஆய்வு செய்தார்.
பின்னர் விவசாயிகளின் இல்லம் தேடி உளுந்து திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அவரது வீட்டிலேயே மானியத்தில் உளுந்து விதைகளை வழங்கி விட்டு விவசாயிகளிடையே பேசும் போது, முன்னெப்போதும் இல்லாத வகையில், தஞ்சை மாவட்டத்தில் 1,50,000 ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி மேற்கொள்ள இலக்கு பெறப்பட்டு, அனைத்து பரப்பிற்கும் சான்று பெற்ற உளுந்து விதைகள் மானியத்தில் தற்போது விநியோக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, உளுந்து சாகுபடியை தீவிரப்படுத்தும் விதமாக, முனைப்பு இயக்கங்கள், வேன் மூலம் கிராமங்களில் விநியோகம், விவசாயிகளின் இல்லம் தேடி உளுந்து போன்ற புதிய ஐடியாக்களை வேளாண் உதவி அலுவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொண்டு அனைத்து கிராமங்களிலும் உளுந்து விதைப்பு செய்து, மண்வளத்தை மேம்படுத்தி, குறைந்த காலத்தில் ஒரு சிறந்த மகசூல் எடுத்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது துணை இயக்குநர் ஈஸ்வர் உடனிருந்தார். இதற்கான ஏற்பாடுகளை துணை அலுவலர் எபினேசர், கண்காணிப்பாளர் பிரிதிவிராஜ், உதவி அலுவலர்கள் குரு சரவணன், சதீஷ், பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.