தமிழ்நாட்டில் தற்போது பி.எட். தேர்வு நடந்து வருகிறது. 4வது செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாள் முன்னதாகவே கசிந்து விட்டது. எனவே இன்று நடைபெற இருந்த தேர்வு மையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே அனுப்பிய வினாத்தாள் வேண்டாம். வேறு வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வினாத்தாள்கள் சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக ஊழியர்களே 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். புதிய பதிவாளராக ராஜசேகரை நியமித்து, உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. தேர்வு தொடங்கிய கடந்த திங்கள்கிழமை முதலே கேள்வித்தாள்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டிருந்த கேள்வித்தாள்கள் திரும்ப பெறப்பட்டு, புதிய வினாத்தாள்களுடன் தேர்வு நடைபெறுகிறது