பிரதமர் மோடி 20ம் தேதி திருச்சி வருகிறார். அவருக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கருப்புகொடி காட்டும் போராட்டம் , அல்லது உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு அனுமதி கேட்டு மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுக்க அண்ணாக்கண்ணு இன்று காலை புறப்பட்டார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் செல்ல முடியாதபடி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளார்.
நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், துணை கமிஷனரே இங்கு வந்து உங்கள் மனுவை பெற்றுக்கொள்வார் என போலீசார் தெரிவித்தார்களாம். இது குறித்து வக்கீல் அய்யாக்கண்ணு கூறியதாவது:
விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் எனக் கூறி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் சொன்னபடி விவசாயிகள் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தவில்லை. இந்தியாவில் 95 கோடி விவசாயிகள் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் வாழ்கிறார்கள். எனவே மோடி திருச்சி வரும்போது அவரை கண்டித்து கருப்புக்கொடி காட்டவோ, அல்லது உண்ணாவிரதம் இருக்கவோ அனுமதிக்க வேண்டும் என மனு கொடுக்க செல்லும்போது என்னை தடுத்து வீட்டுச்சிறையில் வைத்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.