பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் 111 விவசாயிகளை போட்டியிட வைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக கன்னியாகுமரி – பனாரஸ் காசி தமிழ் சங்கமம் ரயிலில், சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 120 பேர் வாரணாசி புறப்பட்டனர். இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு பெட்டியை குறைப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர். இதன் காரணமாக அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாகவும் ஊழியர்கள் கூறினர். இதனால், தஞ்சாவூர் ஸ்டேஷனில் காலை, 6:43 மணிக்கு ரயில் புறப்பட இருந்த நேரத்தில் அபாய சங்கிலியை இழுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்வே அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தி, விழுப்புரத்தில் தனி பெட்டியை இணைத்து விவசாயிகள் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால், விழுப்புரம், செங்கல்பட்டில் ‘கோச்’ கொடுக்காத நிலையில், அய்யாக்கண்ணு போராட்டத்தில் ஈடுபட்டார். அனைவரும் செங்கல்பட்டில் இறக்கி விடப்பட்டனர். இதனால் அவர்கள் வாரணாசி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.