விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் விவசாய விளை பொருட்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் படி உரிய விலையை வழங்க முன்வர வேண்டும், விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்,
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும், மேகதாது அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 57நாட்களாக திருச்சி சிந்தாமணியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று நடைபெறும் பந்தை கண்டித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதா மாதம் காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்காததை கண்டித்தும், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா உருவ படத்தை கருமாதி செய்ததை இன்று காவிரி ஆற்றில் கரைக்கும் இறுதி சடங்கும், காவிரியில் தண்ணீர் திறக்கும் வரை காவிரி ஆற்றுக்குள்ளேயே கூடாரம் அமைத்து காத்திருப்பு போராட்டம் நடத்தவும் ஓயாமரி இடுகாடு வடபுறத்தில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஸ்ரீரங்கம் சரக காவல்துறை உதவி ஆணையர் நிவேதாலட்சுமி மற்றும் காவல்துறையினர் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கர்நாடக அரசு தண்ணீர் திறக்கும் வரை நாங்கள் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்து காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மீட்பதற்காக தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கரைக்கு கொண்டு வந்தனர்.