Skip to content
Home » அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்…..அத்வானி வரவேண்டாம்….. அறக்கட்டளை வேண்டுகோள்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்…..அத்வானி வரவேண்டாம்….. அறக்கட்டளை வேண்டுகோள்

உத்தர பிரதேச  மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.  ஜனவரி 16-ந்தேதி தொடங்கி ஜனவரி 22-ந்தேதி வரை கும்பாபிஷேக விழா நடைபெறும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி மதியம் கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படுகிறது. கும்பாபிஷே விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும்படி அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 4 ஆயிரம் சாமியார்கள், 2,200 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆனால், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என போராட்டம் நடத்தியவர்களில் மிக முக்கிய தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளமாட்டார்கள் என தெரிகிறது. அவர்களுடைய வயது மற்றும் உடல்நலனை கவனத்தில் கொண்டு, நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டதாகவும், அதனை அவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டதாகவும் ராமர் கோவில் அறக்கட்டளை பொது செயலாளர் சம்பத் ராய் கூறினார்.

அத்வானிக்கு தற்போது 96 வயது ஆகிறது. ஜோஷிக்கு அடுத்த மாதம் 90 வயது நிறைவடைகிறது. கும்பாபிஷே விழாவிற்கு வரவேண்டாம் என வயதையும் உடல்நலத்தையும் காரணமாக கூறி கேட்டுக்கொண்டாலும், ராமர் கோவிலுக்காக போராடிய முக்கிய தலைவர்களை வரவேண்டாம் என கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வரவேண்டாம் என அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷியை கூறியிருப்பது மிகவும் அற்பமானது என்றும், அவர்களின் உடல்நிலை அனுமதிக்கவில்லை என்றால், முடிவு எடுப்பதை அவர்களிடமே விட்டிருக்கலாம் என்றும் எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் கூறியிருந்தார். பாஜக தவறு செய்வதாகவும், இதுபோன்ற விஷயங்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஒருவர் கூறி உள்ளார். அத்வானி, ஜோஷி இருவரும் ஒரு சாதாரண மனிதர்களாக அயோத்திக்கு வரவேண்டும் என்றும், அது பாஜக தலைவர்களுக்கு பேரடியாக அமையும் என்றும் மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *