உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், பாரம்பரிய விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் பயிற்சி கலெக்டர் உத்கர்ஷ் குமார் தொட’ங்கி வைத்தார்.
உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் இன்று 19ம் தேதி முதல் வரும் 25ம் தேதி வரை பல்வேறு பாரம்பரிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த ஒரு வார விழாவில் பாரம்பரிய விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணி, கருத்தரங்கம், பாரம்பரிய நடைபயணம், பாரம்பரிய சுற்றுலா, கல்லூரி மாணவர்களுக்கான வினா-விடை போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஓவிய விளக்கப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்நிகழ்வுகள், நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பெருமையையும், பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரணிக்கு முன்னதாக நையாண்டி மேளம், காளையாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் புலியாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரி முதன்மையர் ஜெகன்மோகன், இந்திய தொல்லியல் துறை பாதுகாப்பாளர் விக்னேஷ், மாநகர நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் தமிழ்ப் பல்கலைக்கழகம், அரசு வேளாண் கல்லூரி, பெரியார் மணியம்மை கல்லூரி, வல்லம் அன்னை தெரசா பயிற்சி நிறுவனம் சார்ந்த 250 மாணவ, மாணவிகள் பாரம்பரிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி உற்சாகமாக பங்கேற்றனர்.
தமிழ் பல்கலைக்கழக சுவடி மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் பவானி, உதவி சுற்றுலா அலுவலர் வரதராஜன், பெரியார் மணியம்மை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பாக்யராஜ், பாலரத்தினம், அன்னை தெரசா பயிற்சி நிறுவன இயக்குனர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் செய்திருந்தார்.