நெல்லை வந்துள்ள பேரிடர் மீட்புப் படையினர் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கல்லூரி நிறுவனர் பாலகன் ஆறுமுகச்சாமி , கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். கிருஷ்ணவேணி தலைமை வகித்தனர், சேரன்மகாதேவி தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை எஸ்ஐ சஞ்சய் தேஸ்வால் தலைமையில் 16 வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளம், இயற்கை சீற்றங்கள், பேரிடர், பூகம்பம் மற்றும் சுனாமி காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்புப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது, வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்பது, தக்கவைப்பது, மாரடைப்பு ஏற்படும் போது உடனடியாக உயிர் காப்பது எப்படி, விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவது, ஆம்புலன்சை வரவழைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர். இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.