பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து கோவையில் இருந்து இந்தியா முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் இரு இளைஞர்களின் தொடர் பயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார்.
தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.குறிப்பாக மொபைல் போன் செயலி மற்றும் கணிணிகளை பயன்படுத்தும் பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைப்பது,மோசடி அழைப்புகளால் பணம் பறிப்பது, பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சைபர் கிரிமினல்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது என தொடர்ந்து சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையை சேர்ந்த இளைஞர்கள் சங்கர்ராஜ் சுப்ரமணியம் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பயணம் செல்கின்றனர்.
கோவையில் இருந்து சுமார் 17,000 கிலோ மீட்டர் தூரம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு செய்யும் நோக்கத்துடன் பயணம் செல்ல உள்ள நிலையில்,
இதற்கான துவக்க விழா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழிப்புணர்வு பயணத்தை கோவை மாநகர காவல் துறை ஆணையர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை ஆணையர் சரவணசுந்தர் தற்போது செயலி வாயிலாக மோசடி செய்வது அதிகரித்து உள்ளதாக கூறிய அவர்,இது போன்ற செயலிகளால் வரும் வேலை வாய்ப்பு,பண முதலீடு போன்றவற்றில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.