திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு காவல் நிலையம் மற்றும், பெரம்பலூர் தண்ணீர் பந்தல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோப்ப நாய்ப்படைப்பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார். பதிவேடுகளை சரிபார்த்து வருடாந்திர ஆய்வு மேற் கொண்டார்.
மங்களமேடு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஐஜி கார்த்திகேயன், மங்கள மேடு டிஎஸ்பி முகாம் அலுவலகம் மற்றும் மங்களமேடு காவல் நிலையம் ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
குற்றவழக்குகள் தொடர்பாக புகார் தரவரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்தவேண்டும். புகார் தரவரும் மக்களின் சந்தேகங்களுக்கு உரிய பதில் தரவேண்டும். குற்றவழக்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆய்வின் முடிவில் மங்கள மேடு டிஎஸ்பி முகாம் அலுவலகம் மற்றும் காவல் நிலையம் அருகே மரகன்று களை நட்டார்.
இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள, பெரம்பலூர் மாவட்ட காவல் துறையின் மோப்பநாய் படைபிரிவினை திருச்சி ஐஜி கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்ட காவல் துறையில் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் காவல் துறையின் மோப்பநாய் படைப் பிரிவில் கடந்த 9 ஆண்டுகளாக நிஞ்சா என்ற மோப்ப நாயும், கடந்த நான்கரை ஆண்டுகளாக பைரவா, சக்தி ஆகிய 2 மோப்ப நாய்களும் உள்ளன.
இவற்றில் நிஞ்சா, பைரவா ஆகிய 2 நாய்களும் கிரைம் பிரிவிலும், வெடி குண்டு கண்டறியும் பிரிவிலும் பணியாற்றி வருகின்றன. குறிப்பாக இந்த ஆய்வின் போது, பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய கிரைம் டீமைச் சேர்ந்தபைரவா என்கிற மோப்ப நாய்க்கு, திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் ரிவார்டு வழங்கிப் பாராட்டினார்.
இந்த ஆய்வுகளின் போது அந்தந்தப் பிரிவுகளில் பணியாற்றும் போலீசாருக்கு பணியை மேம்படுத்தும் சில அறிவு ரைகளை வழங்கினார். இந்த ஆய்வுகளின்போது பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா, மங்களமேடு டிஎஸ்பி தனசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.