மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மொத்தம் 1000 காளைகள் களம் இறக்கப்படுகிறது. 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற உள்ளன. 7 சுற்று போட்டி நடந்து கொண்டிருந்தது. சுமார் 550 காளைகள் இறக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்டம் கோடங்கிப்பட்டியை சேர்ந்த முத்தையா என்பவரது காளை வாடிவாசல் வழியாக விடப்பட்டது. அப்போது மணி 1. 40 இருக்கும்.
வாடி வாசல் வழியாக பாய்ந்து வந்த அந்த காளை திடீரென கால் இடறி கீழே விழுந்தது. அதே வேகத்தில் அந்த காளை எழும்பி களத்தில் ஆடும் என வீரர்கள் கருதினர். ஆனால் அந்த காளை எழும்பவில்லை. காலில் காயம் ஏற்பட்டிருந்தது. எனவே வீரர்கள் அருகில் சென்று காளையை தட்டி எழுப்பினர். அந்த காளையால் எழும்ப முடியவில்லை. உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது.
கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆம்புலன்சும் கொண்டு வரப்பட்டது. உடனடியாக காளையை அங்கிருந்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு 2.05 மணிக்கு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. தொடா்ந்து போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.