சென்னையை அடுத்த செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ் (49). தொழில் அதிபரான இவர், பா.ஜ.க.வில் பிரமுகராக இருந்து வருகிறார். அதேபோல் செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டந்தாங்கல் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் எஸ்.எம்.ஜி.சீனிவாசன் (48). தொழில் அதிபரான இவர், அ.தி.மு.க.வில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளராக இருந்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும், செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகர் நேதாஜி 3-வது தெருவை சேர்ந்த தொழில் அதிபரான தங்களது மற்றொரு நண்பரான கண்ணன் (48) என்பவருடன் சேர்ந்து நில வியாபாரம் செய்து வந்தனர். இதில் அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் கண்ணனுக்கு சொந்தமான இடம் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே உள்ளது. அந்த இடத்தை சீனிவாசனும், வெங்கடேசும் மோசடி செய்ததாக தெரிகிறது. இதனை தட்டிக்கேட்ட கண்ணனை, இருவரும் சேர்ந்து துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அன்புவிடம் கண்ணன் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் செங்குன்றம் உதவி கமிஷனர் கலியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ் மற்றும் சீனிவாசன் இருவரையும் கைது செய்தனர். வெங்கடேசனிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகளும், சீனிவாசனிடம் இருந்து ஒரு துப்பாக்கியும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:ஆவடி போலீஸ்