Skip to content

திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்களுக்கு அனுமதி..

  • by Authour

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடியில் புதிய முனையம் அமைக்கப்பட்டு கடந்தாண்டு ஜூன் 11-ந் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபை, சார்ஜா, தோஹா, குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு பகுதிகளுக்கும் தினசரி 20 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. திருச்சி – புதுக்கோட்டை பிரதான சாலையிலிருந்து சுமார் 1.9 கி.மீ தொலைவில் புதிய முனையத்தின் நுழைவாயில் பகுதி அமைக்கப் பட்டுள்ளது. இருதளங்கள் உள்ள முனையத்தில் தரைத்தளத்தில் வருகை பகுதியும், முதல் மாடியில் புறப்பாடு பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய முனையத்தின் முன்பகுதியில் பிரம்மாண்டமான பாலம் அமைக்கப்பட்டு, முதல் மாடிக்கு வாகனங்கள் செல்வதற்கான வழியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களை கருத்தில் கொண்டு ஆட்டோ செல்வதற்கு அனுமதி கிடையாது. முனையத்தின் வெளிப்பகுதியில்தான் பயணிகளை ஏற்றி மற்றும் இறக்கிச் செல்ல முடியும். திருச்சி பழைய முனையம் பிரதான சாலையிலிருந்து மிகவும் குறுகிய தொலைவில் அமைந்திருந்ததால் பயணிகள் மற்றும் உடன் வருவோர் பிரதான சாலையிலிருந்து நடந்தே எளிதாக சென்று வந்தனர். ஆனால் புதிய முனையத்துக்கு சுமார் 1.9 கி.மீ. தொலைவு செல்ல வேண்டியிருந்ததாலும், புறப்பாடு பகுதிக்கு முதல் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளதாலும் உடைமை களுடன் பயணிகள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. அனைவரும் கார்களில் சென்று வர சாத்தியமில்லை என்பதால் ஆட்டோக்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
பயணிகள் நலன் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என எம்பி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் விமான நிலைய இயக்குநருக்கு பரிந்துரைத்தனர்.
கோரிக்கைகளை பரிசீலித்த விமான நிலையத்தின் புதிய இயக்குநராக பொறுப்பேற்றுள்ள ஞானேஸ்வரன், புதிய முனையத்துக்கு ஆட்டோக்கள் சென்று வர கடந்த இரு நாள்கலாக அனுமதி அளித்துள்ளார். விதிமுறைகளின்படியும், இடையூறு இல்லாத வகையிலும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களுக்கு இடமளிக்காத வகையிலும் நடைமுறை சிக்கல்கள், நிர்வாக பிரச்னைகள் ஏற்படாத வகையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவை குறித்து கண்காணிக்கும் வகையில் பரிட்சார்த்த முறையில்தான் ஒரு சில வாரங்களுக்கு இந்த அனுமதி தற்காலிகமாக வழங்கப் பட்டுள்ளது. நிர்வாகப்பிரச்னைகள் ஏற்படாமல் ஆட்டோக்களை இயக்கினால் அனுமதி தொடரும். இல்லாத பட்சத்தில் மீண்டும் ஆட்டோக்களுக்கு அனுமதி கிடைக்காது என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

error: Content is protected !!