தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி நடுக்குளத்தை சேர்ந்தவர் காதர்செரீப் (20). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் இப்ராகிம் (23) என்பவருடன் ஆட்டோவில் காமராஜ் மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கீழவாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையை சேர்ந்த பிரேம்குமார் (25) என்பவர் திடீரென ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்துள்ளார். இதை இப்ராகிம் தட்டி கேட்டார். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பிரேம்குமார் ஆத்திரம் அடைந்து அரிவாளால் இப்ராகீமை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த இப்ராகிம் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ்ஸ்டேசனில் காதர்செரீப் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பிரேம்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.