Skip to content
Home » ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

  • by Senthil

ஆடி மாதம் 18ம் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.  இந்த  விழா காவிரி பாயும் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.  குறிப்பாக ஒகேனக்கல் , மேட்டூர்,  பவானி கூடுதுறை, மோகனூர், முசிறி குளித்தலை,  முக்கொம்பு,  ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கல்லணை, திருவையாறு,  தஞ்சை,  பாபநாசம்,  சுவாமிமலை , கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் என அனைத்து பகுதிகளிலும்  இந்த விழா விமரிசையாக நடைபெறும்.  விவசாயத்திற்கு ஆதாரமான நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

அன்றையதினம் அதிகாலையிலேயே மக்கள் குடும்பம் குடும்பமாக காவிரிக்கு சென்று நீராடி,  காவிரிக்கு சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.  புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தின்போது அணிந்த மாலைகளை காவிரி வெள்ளத்தில் விட்டு  வணங்குவார்கள்.   திருமண வயதில் உள்ள பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் வேண்டியும்,  திருமணமானவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டியும் காவிரியில்  நீராடி கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள்.

ஆடிப்பெருக்கு  தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், காவிரி நதிக்கரையில் கொண்டாடப்படுவது தான் சிறப்பு வாய்ந்தது.  ஆனால் இந்த ஆண்டு இன்னும் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இன்றைய  நிலவரப்படி மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் உள்ளது. அணையில்  90 அடி  தண்ணீர் உள்ளது.

அதே நேரத்தில்  இது சம்பா சாகுபடிக்கு போதுமான தண்ணீர் இல்லை. சம்பா சாகுபடிக்கு 130 டிஎம்சி தண்ணீர் தேவை.   ஆனால் அணையில் தற்போது 52 டிஎம்சி தண்ணீர் தான் உள்ளது. மேலும் சம்பா பருவத்திற்கு இன்னும் 20 நாள் கழித்து மேட்டூர் அணை திறந்தாலே போதுமானது. ஆனால் ஆடிப்பெருக்கு விழா ஆகஸ்ட் 3 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

ஆடிப்பெருக்கு தினத்தில் தஞ்சை வரை மேட்டூர் தண்ணீர் செல்ல வேண்டும் என்றால் 28ம் தேதிக்குள் மேட்டூர் அணையை திறக்க வேண்டும்.  எனவே மேட்டூர் அணை திறக்கப்படுமா என்பது குறித்து  உடனே  நீர்வளத்துறை அறிவிப்பு வெளியிட வேண்டும்  என்று  டெல்டா மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!