அமாவாசைதோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசையில் தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்தது. இன்று ஆடி அமாவாசை என்பதால் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, முசிறி பரிசல்துறை காவிரி , குளித்தலை , கல்லணை, தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை, கும்பகோணம் மகாமக குளம், பூம்புகார், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் காவிரியில் இன்று அதிகாலை முதல் மக்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். இதனால் காவிரி கரைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தர்ப்பணம் கொடுப்பதற்காககே ஏராளமான புரோகிதர்கள் காவிரி கரைக்கு வந்திருந்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலிலும், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலிலும் மக்கள் நீராடி தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். இதற்காக தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் ராமேஸ்வரம் வந்து உள்ளனர்.
ராமேஸ்வரம் கோவிலின் வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து கிழக்கு ரத வீதி வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அந்தப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலில் நீராடும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி கடல் பகுதியிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.