கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைகள் நிறுவி மாவட்ட கழக அலுவலகம் திறந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொல்லம் மாவட்டம் புனலூர் தொகுதியில் குறைந்த பட்சம் மாதம் 20 நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் கொல்லம் மாவட்டம் புனலூர் தொகுதியில் நடைபெற்ற கூட்டுறவு வங்கி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே தனியாக போட்டியிட்டு திமுக இரண்டாம் இடம் பிடித்தது. வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் புனலூர் தொகுதியில் தலைமை கழக அனுமதி பெற்று திமுக போட்டியிடும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் நிலையில் அதைத் தடுக்கும் நோக்கில் நேற்றுமுன்தினம் இரவு புனலூரில் உள்ள கொல்லம் மாவட்ட திமுக அலுவலகத்தில் முகமூடி அணிந்த கூலிப்படையினர் மூன்று பேர் புகுந்து தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருட்கள் சூறையாடினர்.
நல்ல வேளையாக எப்போதும் அங்கு தங்கும் நமது கொல்லம் மாவட்ட கழக செயலாளர் ரெஜிராஜ் வேறு இடத்தில் தங்கியிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் இன்றி உயிர் தப்பினார் . இந்த சம்பவம் குறித்து புனலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து உள்ளோம். காவல் துறை உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதுடன் கேரள மாநிலம் முழுவதும் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.