புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சிங்கம்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் ஸ்ரீதர் (30 ) இவர் குளித்தலை சுங்ககேட் ரவுண்டானா திருச்சி – கரூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் கேசியராக வேலை பார்த்து வந்தார்.
குளித்தலை தெற்கு மணத்தட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன்கள் பிரதீப் ,சேது ஆகியோர் நேற்று மாலை 7 மணி அளவில் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்த ஸ்ரீதரிடம் சென்று மாமுல் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதில் கேசியர் ஸ்ரீதர் பணம் தர மறுத்ததால் பிரதீப், சேது ஆகிய இருவரும் ஸ்ரீதரை தலை, கழுத்து ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டினர் .உயிருக்கு பயந்து கடையை விட்டு சாலையில் ஓடி வந்த ஸ்ரீதரை அவர்கள் இருவரும் விரட்டிசென்றனர்.
அப்போது சுங்ககேட் பஸ் ஸ்டாப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த குளித்தலை சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஓடி சென்று அந்த வாலிபர்களை மடக்கி உள்ளார் .
வாலிபர்கள் ஸ்ரீதரை சாலையில் ஓட ஓட வெட்ட முயற்சி செய்த பொழுது தடுக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் கையில் வெட்டு விழுந்துள்ளது. இதில் அவரின் வலது கையில் மூன்று விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உயிரை பணயம் வைத்த சப்_ இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வாலிபர்கள் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணைக்காக குளித்தலை காவல் நிலையம் கொண்டு சென்றார். உயிருக்கு போராடிய பார் கேசியர் ஸ்ரீதர் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அபின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் . இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.