தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருப்புறம்பியம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (53). இவர் கடந்த 30 ஆண்டுகளாக அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தீபன் ராமர், தமிழ்வாணன் ஆகியோர் முருகேசன் கடைக்குச் சென்று கடனாக பொருள்கள் கேட்டு உள்ளனர். ஆனால் முருகேசன் கடன் தர மறுத்துள்ளார். தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து முருகேசனை தாக்கியதில் முகத்தில் மூன்று இடத்தில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் முருகேசன் 15ம் தேதி கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மேல் சிகிச்சைக்காக கடந்த 17ம் தேதி முதல் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையி அடைக்கப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் முன் ஜாமின் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் முருகேசனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா நேரில் சந்தித்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது: இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எக்காரணத்தை கொண்டும் வெளியே வர முடியாத அளவிற்கு பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்திக்க உள்ளோம். சுவாமிமலை பகுதியில் அடிக்கடி இதே போல் சம்பவம் அரங்கேறி வருகிறது. எனவே அதை தடுக்க பல்வேறு முயற்சிகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
இருந்தும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் மீண்டும் அரங்கேறி வருகிறது. எனவே குற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீது 307(கொலை முயற்சி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி காவல் கண்காணிப்பாளரை வலியுறுத்த உள்ளோம். மேலும் இது போன்ற சம்பவங்களுக்கு காவல்துறையினர் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.