திருச்சி பீம நகர் யானைக்கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் ( 55 ). உறையூர் பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். அதே பகுத்தியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் மீது தன்னை ஆள் வைத்து கடத்தியதாக உறையூர் காவல் நிலையத்தில் சிவனேசன் புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் சிவனேசன் தனது வீட்டிலிருந்து பாலக்கரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்களில் சென்ற 4 பேர், பாலக்கரை மேம்பாலத்தின் மையப் பகுதியில் வைத்து வழிமறித்து தலை மற்றும் உடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். சிவனேசனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த போது, மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவனேசனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நள்ளிரவு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் பாலக்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.