காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று இந்த மையத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர் ஒருவர் உள்ளே சென்றார். அவர் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கி, திறக்க முயற்சி செய்தார். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த மர்மநபர், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் மின்சாதனங்களை சேதப்படுத்தினார். இந்த சம்பவம் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள இ-சர்வைலன்ஸ் கருவி மூலம் வங்கி மேலாளர் ஸ்ரீதருக்கு தெரியவந்தது. உடனே அவர், காரைக்கால் நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஏ.டி.எம். ஐ உடைக்கும் காட்சியை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோவை கைப்பற்றிய போலீசார் அதனை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அந்த நபர் நாகப்பட்டினம் திட்டிச்சேரியைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்பது தெரியவந்தத. குடும்பம் வறுமை நிலையில் உள்ளதாகவும் தங்கைக்கு திருமணம் செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்த நிலையில் காரைக்காலுக்கு வந்து மது அருந்தி, மது போதையில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். குற்றவாளியை கைது செய்த போலீசார் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.