திருச்சி மாம்பழச்சாலையில் இருந்துஸ்ரீரங்கம் செல்லும் சாலையில் உள்ள வீரேஸ்வரம் எதிரில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இங்கு இரவு நேர காவலாளி இல்லை. அதே நேரத்தில் அந்த ஏடிஎம் அறை முழுவதும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் இணைப்பு மும்பையில் உள்ள தலைமையகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏடிஎம் அறைக்கு இன்று அதிகாலை ஒரு மர்ம நபர் வந்து உள்ளார். அவர் குரங்கு குல்லா, மாஸ்க் , ஜெர்கின் கையில் உறை அணிந்து இருந்தார். ஏடிஎம் அறைக்குள் சென்றதும் அவர் அங்கிருந்த கண்காணிப்பு காமிரா இணைப்புகளை துண்டித்து உள்ளார். பின்னர் ஏடிஎம் எந்திரத்தை உளியால் உடைக்க முயன்று உள்ளார். ஆனால் முடியவில்லை.
அப்போது அதிகாலை வேளை என்பதாலும், கடும் குளிர் என்பதாலும் மக்கள் நடமாட்டம் இல்லை. ஆனாலும் அவர் முடிந்த வரை உடைத்து பார்த்திருக்கிறார். முடியவில்லை.
இதற்கிடையே மும்பையில் உள்ள தலைமையகத்தில், ஏடிஎம் அறையின் கண்காணிப்பு காமிரா துண்டிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது. அங்கிருந்த அதிகாரிகள் மெர்கண்டைல் வங்கி மேலாளருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். அவர் பைக்கில் வந்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வந்து பார்த்தபோது ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி நடந்தது தெரியவந்தது.
எந்திரத்தை உடைக்க கொள்ளையன் உளியை பயன்படுத்தி உள்ளார். அந்த உளியை கூட எடுக்காமல் கொள்ளையன் ஓடிவிட்டார். அப்போது யாரும் அந்த பகுதிக்கு வந்தார்களா என தெரியவில்லை. அதிகாலை 2மணிக்கு தான் இந்த பகுதிக்கு போலீசார் ரோந்து வந்து உள்ளனர். அதன் பிறகு இந்த கொள்ளை முயற்சி நடந்து உள்ளது.
அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தபோது அதிகாலை 2.40 மணிக்கு கொள்ளையன் உள்ளே புகுந்தது தெரியவந்துள்ளது. சுமார் 40 நிமிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். ஆனால் கொள்ளையடிக்க முடியவில்லை. அந்த ஏடிஎம் எந்திரத்தில் பல லட்சம் ரொக்கப்பணம் இருந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவான ரேகைகள் மற்றும் தடயங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.