அரியலூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு திருச்சி நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவரின் கையில் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அந்தப் பையன் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்துள்ளது. ரயில்வே போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் பணம் எடுத்து வந்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. அவரிடம் சுமார் 75 லட்சத்திற்கு மேல் பணம் இருந்ததால் ரயில்வே போலீஸ் உடனடியாக திருச்சி வருமானவரித்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். அந்த நபரிடம் ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்ட போது, அவர் பெரம்பலூர் மாவட்டம்
மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த வினேத்குமார் என்று கூறியுள்ளார். மேலும் தான் சோளவியாபாரம் செய்து வருவதாகவும், சோளம் விற்ற பணத்தை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.
இந்நிலையில் திருச்சி வருமான வரிதுறை அலுவலர்கள் தற்பொழுது அரியலூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து பிடிபட்ட வினோத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வினோத் சோளம் விற்ற பணத்தை எடுத்து வந்தாரா, அல்லது ஹவாலா பணப்பரிமாற்றமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.