இந்திய கிரிக்கெட் அணியின் சூழல்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றார். அவர் 2வது டெஸ்டில் ஆடினார். பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்டில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் நேற்று 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. அதைத்தொடர்ந்து அஸ்வின் பிரிஸ்பேனில் பேட்டி அளித்தார். அப்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அத்துடன் ஒவ்வொரு வீரரிடமும் அவர் பிரியாவிடை பெற்றார். அதைத்தொடர்ந்து சக மத்தியில் அஸ்வின் பேசினார். அவர் பேசியதாவது: குழு கூட்டத்தில் பேசுவது எளிது. நான் அதை வெளிப்படுத்தவில்லை என்றாலும், இது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தருணம். ரோகித் சர்மாவுக்கு நன்றி .விராட் கோலிக்கு நன்றி, கவுதம் கம்பீருக்கு நன்றி. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த தொடரில் விளையாடுவதற்காக முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளதாக உணர்கிறேன். எல்லா மாற்றங்களையும் நான் பார்த்துள்ளேன். ராகுல் டிராவிட் அணியில் இருந்து விடைபெற்றுள்ளார். சச்சின் தெண்டுல்கர் விடைபெற்றுள்ளார்.நான் சொல்வது உண்மை தோழர்களே, ஒவ்வொருவருக்கும் நேரம் வரும். இது உண்மையான என்னுடைய நேரம். நான் இதை முழுமையாக ரசித்தேன். நான் சிறந்த நட்பை கட்டமைத்தேன்.குறிப்பாக கடந்த 4 முதல் 5 வருடங்களில். அன்புடன் விளையாடி வரும் என்னுடைய சில சக வீரர்களை விட்டுச் செல்கிறேன்.
இவ்வாறு அவர் உணர்ச்சிபூர்வமாக பேசினார். அப்போது அவரது கண்கண் பனித்தன.
அதைத்தொடர்ந்து அவர் நேற்று ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டார். இன்று அவர் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவரை குடும்பத்தினர், நண்பர்கள் மாலை அணிவித்து மேளதாளம் முழங்க வரவேற்றனர்.
சென்னை வந்த அஸ்வின் நிருபர்களிடம் கூறியதாவது: கிரிக்கெட்டில் நுழையும்போது என்ன உணர்வுடன் இருந்தேனோ, அதே உணர்வுடன் இன்னும் இருக்கிறேன். இந்திய அணியில் இருந்து தான் ஓய்வு பெற்றிருக்கிறேன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. கிரிக்கெட் வீரனாக தொடர்வேன். என்னால் சும்மா இருப்பது கடினமான விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார். அஸ்வின் தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளார். ஐபிஎல், டிஎன்பிஎல் போட்டிகளில் அவரது ஆட்டத்தை காணலாம்.