Skip to content
Home » 451வது விக்கெட் கைப்பற்றினார் அஸ்வின்

451வது விக்கெட் கைப்பற்றினார் அஸ்வின்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்ற வகையிலும், அண்மைகாலமாக இவ்விரு அணிகளும் நீயா-நானா? என்று வார்த்தை போரில் முட்டிக்கொள்வதாலும் இந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை தூண்டியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்கிறது.   உஸ்மான் கவாஜா,  டேவிட் வார்னர்  தொடக்க வீரர்களாக இறங்கினர்.  இந்திய வீரர் முகமது ஷமி முதல் ஓவரை வீசினார். இந்திய அணி தரப்பில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் இன்று விளையாடுகிறார்கள்.

இந்த டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வினும் இடம் பெற்று உள்ளார். அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 449 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இன்று அவர் 450வது விக்கெட்டை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இந்திய அணி தரப்பில் இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் இன்று மதியம் அவர் தனது 11வது ஓவரை வீசினார். முதல் பந்தில் அவர்  ஆஸ்திரேலிய வீரர்   அலெக்ஸ் கேரி விக்கெட்டை  போல்டாக்கி 450வது விக்கெட்டை கைப்பற்றினார். 89வது மேச்சில் 167வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்தார்.  அப்போது அலெக்ஸ் கேரி 33 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அடுத்த ஓவரை வீசிய  அஸ்வின்,  ஆஸ்திரேலிய கேப்டன்  பேட் கம்மின்ஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார். இது கோலியிடம் கேட்ச் ஆனது. இதையும் சேர்த்து அஸ்வின் 451விக்கெட்டை சாய்த்தார். மேலும் பல விக்கெட்டுகளை அவர் சாய்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் கைப்பற்றியதில் இந்திய அளவில்  கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *