அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு ரூ.10.44 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இரும்புலிக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (27.11.2024) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவித்ததாவது,
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் செந்துறை வட்டம், இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்ததுடன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெற்று தீர்வு
காணப்பட்டது. இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 102 மனுக்கள் பெறப்பட்டு, 69 மனுக்களும் ஏற்கப்பட்டும், 33 மனுக்கள் விசாரணையிலும் உள்ளது. மேலும், இன்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் 48 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
இம்முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.6,52,500 மதிப்பில் இயற்கை மரணம் உதவித்தொகையும், 29 பயனாளிகளுக்கு ரூ.2,62,000 மதிப்பிலான திருமண உதவித்தொகைகளும், 07 பயனாளிகளுக்கு ரூ.17,250 மதிப்பில் கல்வி உதவித்தொகைகளும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 31 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் ஆணைகளும், 1 பயனாளிக்கு விதவை சான்றும், நில அளவை துறையின் மூலம் 05 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றம் ஆணைகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.18,896 மதிப்பில் பேட்டரி தெளிப்பான், மண்புழு உரப்படுகை, பூச்சி விரட்டி மற்றும் அங்கக உரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.16,620 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் பித்தளை தேய்ப்பு பெட்டியும், தோட்டக்கலை துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.23,906 மதிப்பில் முந்திரி இடுப்பொருட்களும், கத்திரி நாற்றுகலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.53,396 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா கைப்பேசிகளும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் என மொத்தம் 118 பயனாளிகளுக்கு ரூ.10,44,568 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது,
இம்முகாமில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளரச்சித்திட்டம், சமூக நலத்துறை, சுகாதாரத் துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அனைத்துத் துறை மாவட்ட நிலையிலான அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகின்ற மிகச்சிறப்பான திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். மக்கள் தொடர்பு முகாமின் முக்கியமான நோக்கம் தொலைதூரத்தில் உள்ள கிராமங்கள் வரை உள்ள மக்களுக்கும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன் பயன்களை கொண்டு சேர்ப்பதாகும். அரசின் திட்டங்கள் குறித்தும், திட்டத்திற்கான தகுதிகள் குறித்தும், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தும், திட்டங்களின் பயன்களை பெறுவது குறித்தும், அரசின் திட்டங்கள் கிராமத்தில் உள்ள மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாதிரியான முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் இத்தகைய முகாம்களை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
முன்னதாக, இம்முகாமில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டபணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி பார்வையிட்டார்.
இம்முகாமில், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியர் (பொ) கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் உமா மகேஸ்வரன், செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலரகள் பிரபாகரன், ஜாகிர்உசைன், இரும்புலிக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் மற்றும் அனைத்துத்துறை மாவட்ட நிலை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.