Skip to content
Home » யுஜிசிக்கு எதிராக முதல்வர் தனித்தீர்மானம்- அதிமுக ஆதரவுடன் நிறைவேற்றம்

யுஜிசிக்கு எதிராக முதல்வர் தனித்தீர்மானம்- அதிமுக ஆதரவுடன் நிறைவேற்றம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் அந்த தனித் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

யு.ஜி.சி.யின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. தமிழ்நாட்டின் உயர்கல்வி முறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக யு.ஜி.சி.யின் புதிய விதிகள் அமைந்துள்ளன. கல்வியையும், மக்களையும், எதிர்கால தலைமுறையையும் காக்க இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிக்கலாம் எனக் கூறுவது சரியானது அல்ல.

கல்வித்துறையில் எதைச் செய்ய வேண்டுமோ அதை மத்திய அரசு செய்வதில்லை. அரசு பொதுத்தேர்வு என்ற பெயரில் அனைவரையும் வடிகட்டி கல்வி கற்க விடாமல் செய்கின்றனர்.நீட் தேர்வு மூலம் மருத்துவக் கனவை சிதைக்கும் வேலையை செய்து வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆள் மாறாட்டம், வினாத்தாள் லீக் என குளறுபடி நடப்பதில் நம்பர் ஒன் தேர்வு நீட் தான்.

துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை கவர்னரிடம் கொடுப்பது பல்கலைக்கழகங்களை சிதைக்கும் முயற்சி. யு.ஜி.சி.யின் அறிவிப்பு கூட்டாட்சிக்கு எதிரானது; மாநில அரசை சிறுமைப்படுத்தும் செயல். மாநில அரசின் கல்வி நிலையங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. பேரவை தீர்மானத்தைப் பார்த்து மத்திய அரசு தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால் மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து  முதல்வர்  ஸ்டாலின் அரசின்  தீர்மானத்தை  வாசித்தார். இதற்கு அதிமுக, காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  ஆதரவு தெரிவித்தன.   அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அவர், மற்ற மாநிலங்களின் ஆதரவை பெற்று போராட வேண்டும். இது இந்தி திணிப்பு முயற்சி  என்றார்.

இந்த தீர்மானத்திற்கு பாஜக  எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.   பின்னர் ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து முதல்வர்  பேசினார்.   அதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.