தமிழக சட்டமன்றம் கடந்த பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, 22-ம் தேதி வரை அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மார்ச் 16-ம் தேதி மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகி, 7 கட்ட தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. மக்களவை தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்த நிலையில், துறைகள் தோறும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்த சட்டப்பேரவை இன்றுகாலை10 மணிக்கு கூடியது.
முதல் நாளான இன்று சபை கூடியதும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவு தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்புகள் வாசித்தார். விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி , முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், சின்னசேலம் சிவராமன், தலைவாசல் ராசாம்பாள் வையாபுரி, உள்பட பல்வேறு முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை வாசித்த சபாநாயகர், அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி அனைவரும் எழுந்து அஞ்சலி செலுத்தினர். இதுபோல குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி சாராய சாவில் இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கூட்டத்தை நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர்.
இந்த நிலையில் அதிமுக , காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கள்ளச்சாராய சாவு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.