திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கூடுதல் எஸ்பியாக பணியாற்றியவர் பல்வீர் சிங். ஐபிஎஸ் அதிகாரியான இவர், 2020ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். மிகவும் நேர்மையாகவும், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் சிலரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து, அவர்களின் பல்லைப் பிடுங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தகவல்கள் வெளியானதும் சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. மேலும், அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் பல்வீர் சிங் உள்பட 15 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்தநிலையில், அவர் மீதான சஸ்பெண்ட்டை ரத்து செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. பல்வீர்சிங் கடந்த 10 மாதத்துக்கு முன்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் ஒருவரை நீண்ட காலம் சஸ்பெண்ட்டில் வைத்திருக்க முடியாது. மேலும் அவர் மீதான வழக்கில் இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. வழக்கு விசாரணையில் உள்ளது என்ற காரணத்திற்காக அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..