ஆசிய கோப்பை தொடரில் இலங்கை பல்லகெலெவில் நேற்று இந்தியா-நேபாளம் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிெபற வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கின.
டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நேபாளம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக விளையாடிய குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் இருவரும் முறையே 38 மற்றும் 58 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய பீம் ஷர்கி 7 ரன்கள், ரோகித் பவுடல் 5 ரன்கள், குஷால் மல்லா 2 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். அடுத்து வந்த குல்ஷன் ஜா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நேபாளம் 37.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்ற நிலையில் ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து திபேந்திர சிங் 29 ரன்களிலும் சோம்பால் கமி 48 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். 48.2 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது.
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழை இடைவிடாது பெய்துகொண்டிருந்ததால், போட்டி மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின்னர் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டியை இந்திய அணிக்கு 23 ஓவராக குறைத்தனர். அதில் இந்தியா வெற்றிபெற 145 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இரவு 10.15 மணிக்கு மீண்டும் போட்டி தொடங்கியது.
அந்த இலக்கை நோக்கி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சும்பன் கில் விளையாடினர். இறுதியில் இந்திய அணி 20.1 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 147 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் இருந்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா 59 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 74 ரன்கள் சேர்த்திருந்தார். அதேபோல் சுப்மன் கில் 62 பந்துகளில் 8பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு 67 ரன்கள் சேர்த்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.