Skip to content
Home » ஆசிய கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானை விரட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை…

ஆசிய கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானை விரட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை…

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் சூப்பர்4 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், பாகிஸ்தானும் நேற்று கோதாவில் குதித்தன. மழை காரணமாக போட்டி 45 ஓவராக குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியில் இமாம் உல்-ஹக்குக்கு முதுகுவலியால் ஓய்வு கொடுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக மறுபடியும் பஹர் ஜமான் சேர்க்கப்பட்டார். இதே போல் சாத் ஷகீல் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அப்துல்லா ஷபிக் வாய்ப்பு பெற்றார். காயமடைந்த ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோருக்கு பதிலாக முகமது வாசிம், புதுமுக வீரர் ஜமன் கான், முகமது வாசிம் இடம் பிடித்தனர். ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி அப்துல்லா ஷபிக்கும், பஹர் ஜமானும் பாகிஸ்தானின் இன்னிங்சை தொடங்கினர். போதிய ரன் எடுக்க முடியாமல் தகிடுதத்தம் போடும் பஹர் ஜமான் (4 ரன்) இந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. அவரை மதுஷன் காலி செய்தார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 29 ரன்னிலும், அப்துல்லா ஷபிக் 52 ரன்னிலும், முகமது ஹாரிஸ் 3 ரன்னிலும், முகமது நவாஸ் 12 ரன்னிலும் வெளியேறினர். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 130 ரன்களுடன் தள்ளாடியது. இந்த நெருக்கடியான சூழலில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும், இப்திகர் அகமதுவும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இடையில் மழையால் மேலும் அரைமணி நேரம் ஆட்டம் தடைபட்டதால் 42 ஓவராக குறைக்கப்பட்டது. தங்களை வலுவாக நிலைநிறுத்திக் கொண்ட ரிஸ்வானும், இப்திகரும் இலங்கையின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். இதனால் கடைசி கட்டத்தில் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. ஸ்கோர் 238-ஐ எட்டிய போது இப்திகர் 47 ரன்களில் (40 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஷதப்கான் 3 ரன்னில் வீழ்ந்தார். நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் 102 ரன்கள் திரட்டி அசத்தினர். முகமது ரிஸ்வான் 86 ரன்களுடன் (73 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இலங்கை தரப்பில் பதிரானா 3 விக்கெட்டும், பிரமோத் மதுஷன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர், ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி இலங்கை அணி 42 ஓவர்களில் 252 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு சற்று மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இலங்கை அணியில் குசல் பெரேரா 17 ரன்னிலும், நிசாங்கா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு குசல் மென்டிசும், சமரவிக்ரமாவும் இணைந்து அணியை நிமிர வைத்தனர். இவர்களை அவ்வளவு எளிதில் பாகிஸ்தான் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. ஸ்கோர் 177-ஆக உயர்ந்த போது, சமர விக்ரமா 48 ரன்னிலும், குசல் மென்டிஸ் 91 ரன்னிலும் (87 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் இப்திகர் அகமதுவின் பந்து வீச்சில் சிக்கினர். கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து 3 விக்கெட் சரிந்ததால் பரபரப்பு தொற்றியது. இறுதி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான கடைசி ஓவரை புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஜமன் கான் வீசினார். இதில் முதல் 4 பந்தில் 2 ரன் மட்டுமே எடுத்த இலங்கை மதுஷன்னின் (1 ரன்) விக்கெட்டை ரன்-அவுட்டில் பறிகொடுத்தது. 5-வது பந்தில் அசலங்கா பவுண்டரி விரட்டினார். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில், அந்த 2 ரன்னை அசலங்கா எடுத்து திரில் வெற்றியை தேடித்தந்தார். இலங்கை அணி 42 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 11-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அசலங்கா 49 ரன்களுடன் (47 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். சூப்பர்4 சுற்றில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் பாகிஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறியது. ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா- பாகிஸ்தான் இறுதி ஆட்டத்தில் ஒரு போதும் மோதியது கிடையாது. அந்த வரலாறு இந்த முறையும் நீடிக்கிறது.  நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் சந்திக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *