அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுமி சர்வாணிக்கா பல்வேறு மாநில தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு விருதுகளையும் பழக்கங்களையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் இலங்கை CITRUS – வாஸ்கதுவாவில் 03-12-2022 முதல் 11-12-2022 வரை நடைபெற்ற 16வது மாபெரும் ஆசிய சதுரங்க போட்டியில் சர்வாணிக்கா இந்தியா சார்பில் கலந்து கொண்டார். ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் ஏழு வயதுக்குட்பட்டோருக்கிடையே நடைபெற்ற மூன்று பிரிவுகளிலும் முழு வெற்றிகளைப் பெற்று தங்கங்கள் வென்று 3 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
இதன் மூலம் மூன்று பிரிவுகளில் நடைபெற்ற 23ஆட்டங்களிலும் முழுமையாக வெற்றிகளை பெற்று, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவரது அணிக்கான பதக்கங்கள் உட்பட மொத்தம் 6 தங்க பதக்கங்கள் மற்றும் சுழற் கேடயங்களை வென்றார்.
இவ்வாறு ஏழு வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆசிய சதுரங்க போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற சர்வாணிக்கா இன்று குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அரியலூருக்கு வருகை தந்தார். அவருக்கு அரியலூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டாலின் சர்வாணிக்காவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து அவரது சொந்த கிராமமான உடையார்பாளையம் கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழாவும் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.